கண்ணோட்டம் (இரக்கஉணர்வு) பாசம்,கருணை,காதல்,பரிவு எனும் பல சொற்களாலும் உணரப்படும் உணர்வு அன்பு. அன்பு செலுத்தப்படும் இடத்தைப் பொறுத்து சொற்களின் பொருளும் மாறுபடுகிறது. இவை அனைத்திற்குமே அடிப்படையாக விளங்குவது இரக்கஉணர்வு என்னும் கண்ணோட்டம். தொடர்பில்லாத உயிர்கள் மீதும் கருணையும் இரக்கமும் காட்டக் கற்றுத் தருபவை நம் அறநூல்கள். தொடர்புடையோரிடத்தும் அது தொடருமாயின் வாழ்வில் சிக்கல் என்பதேது? அமைதியான அகவாழ்வுக்கும் பண்பட்ட புறவாழ்வுக்கும் அடிப்படையே கண்ணோட்டம் எனும் இரக்கஉணர்வு. இதையே வள்ளுவர், கண்ணோட்டம் என்னும் கழிப்பெருங்காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு(571) எனக் கூறுகிறார். (கழிப்பெருங்காரிகை_ மிகச்சிறந்த அழகு) தொடர்புடையோரிடத்து நெகிழ்ந்து நடக்கும் இப்பண்பே மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவதோடு சிறந்த அழகாகவும் விளங்குகிறது.அதனாலேயே இவ்வுலகம் நிலைபெற்று வாழ்கிறது. இந்நெகிழ்தல் பண்பு இல்லையானால்,ஒருவரை ஒருவர் சீறுவதும்,சிதைப்பதுமே வாழ்க்கையாக இருக்கும்.ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையிலேயே உள்ளத்தின் நெகிழ்ச்சி புலப்படும். மக்களுக்குப்பிறவியிலேயே இந்தக் கண்ணோட்டம் அமைந்த...