இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற நட்பினைப் பறை சாற்றுவோராவர். ' ஒருவர் பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...