நல்லாசிரியர் என்பவர் கடினமான கருத்துகளை எளிதாகக் கற்பிக்கக் கூடியவராகவும், புதியதைப் புரிந்து கற்றுக் கொள்ளும் திறம் உடையவராகவும் இருக்க வேண்டும். – கன்பூசியஸ் சென்ற ஆண்டு வரை... ஆசிரியர் தினமென்றால்…! பள்ளிக்குள் நுழையும் பொழுதே… ‘ஆசிரியர் தின வாழ்த்துகள்’ என்ற வாழ்த்தொலியோடு கூடிய பூங்கொத்தாய்ச் சிரிக்கும் முகங்கள்…! வகுப்பறைக்குள் கால் வைத்த மறுகணமே மலர்மாரி…! வண்ணக் காகிதத் தோரணங்களால் வகுப்பறை அலங்காரம்…! கரும்பலகை முழுதும் பாராட்டு வாசகங்கள்…! கையிலுள்ள பூக்கள் உதிர்வதற்குள் ஆசிரியரிடம் சேர்த்துவிட வேண்டுமென்ற பரபரப்பு…! குவியும் வாழ்த்து அட்டைகள்…! அட்டைகளைத் தானே தயாரித்து வண்ணமிட்டு, மனதிலுள்ள வாசகங்களை எழுதி உறையிட்டு முட்டி மோதி ஆசிரியரிடம் சேர்த்து, உடனே கருத்து கூறக் கட்டாயப்படுத்தும் உரிமையான அன்பு…! வாழ்த்து மடல்களைப் பிரித்தால், என் தேவதைக்கு…, உலகின் மிகச்சிறந்த ஆசிரியருக்கு…, என்ற ‘விளித்தலுடன்’ தொடங்கும் சொற்றொடர்கள்…! ‘பிறவிப் பயனை’ அன்றே எய்திய உணர்வு ஏற்பட்டுவிடும் என் போன்ற ஆசிரியர்களுக்கு…! ‘நரை கூடிக் கிழப்பருவம்’ தொடும் வயதிலும் ஆசிரியர்களைத் தேவதைக...