‘ சைவம்’ என்ற சொல்லுக்கு சிவ சம்பந்தம் உடையது’ என்பது பொருளாகும். சிவனுடன் ஒன்றி இருப்பதான நிலையே ‘ சைவம்’ என்கிறார் திருமூலர் . பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களும் சிவ சம்பந்தம் உடையன. ‘ சித்தாந்தம்’ என்பது முடிந்த முடிவு’ . எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் கொள்ளப்படுவது முடிவு. பின் நன்கு ஆராய்ந்து இறுதியாக கொள்ளப்படுவது முடிந்த முடிவு. சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிவாகவும் இருக்கலாம். எனினும் ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலையாக இல்லாமல் நிலைத்து நிற்கும் முடிவாகி நிகழுமாயின் அதுவே முடிந்த முடிவாகும். எனவே சித்தாந்தம் என்பது முடிந்த முடிவாகிறது .( சைவ சமய விளக்கு நா. சுப்புரெட்டியார்). சுருங்கக் கூறின் அப்பர் , சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயக் குரவர்களும், மெய்கண்டார், அருள்நந்தி சிவம். மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் போன்ற சந்தான ஆசிரியர்களாலும் , வழிவந்த அருட்பெரும் சான்றோர்களும் பரப்பி வழங்கப்பெற்றது சைவ சித்தாந்தம். வடமொழியில் உபநிடதங்களிலும் வேறு பல வேத ...