"வயதாகிவிட்டது... அடிக்கடி வந்து செல்..." என்ற அம்மாவிடம் அலுவலக வேலையைக் காரணம் காட்டி, சந்திக்கக் காலம் நீட்டித்ததும்... "ஊருக்கு போகணும்மா... இரண்டு நாள் விடுமுறை தாங்க..." என்ற பணியாளிடம் "முடியவே முடியாது..." என மறுத்ததும்... "அப்பா... நேற்று பள்ளியில்..." என்று ஆரம்பிக்கும் முன்பே "நிறைய வேலை இருக்கு, கிளம்பு..." என்று மகளின் வாயை அடைத்ததும்... "இரவு உணவுக்குக் காய்கறி புலாவ் செய்து தருவீர்களா..?" எனக் கேட்ட மகனை அலுவலக தொடர் வேலையைக் காரணம் காட்டி செய்ய மறுத்து முகம் சுருங்க வைத்ததும்... அக்கம் பக்கத்தாரிடம் பேச பல விஷயங்கள் இருந்தும், நேர மேலாண்மை கருதி முகமன் தவிர்த்ததும்... "காப்பு கட்டியாச்சு... யாரும் வெளியே போகக் கூடாது, உள்ளேயும் வரக்கூடாது..." என்று கிராமத்து பூசாரி கூறியதை எள்ளி நகைத்ததும்... சுத்தம் கருதி "கால்களைக் கழுவி உள்ளே வா..." என்ற பாட்டியைப் பத்தாம் பசலியாய் பரிகசித்ததும்... ஓரிரு நாட்களில் மாறிப்போனது. மாற்றியது அணுவினும் சிறிய ஓர் கிருமி..! ...