"வயதாகிவிட்டது... அடிக்கடி வந்து செல்..." என்ற அம்மாவிடம் அலுவலக வேலையைக் காரணம் காட்டி, சந்திக்கக் காலம் நீட்டித்ததும்...
"ஊருக்கு போகணும்மா... இரண்டு நாள் விடுமுறை தாங்க..." என்ற பணியாளிடம் "முடியவே முடியாது..." என மறுத்ததும்...
"அப்பா... நேற்று பள்ளியில்..." என்று ஆரம்பிக்கும் முன்பே "நிறைய வேலை இருக்கு, கிளம்பு..." என்று மகளின் வாயை அடைத்ததும்...
"இரவு உணவுக்குக் காய்கறி புலாவ் செய்து தருவீர்களா..?" எனக் கேட்ட மகனை அலுவலக தொடர் வேலையைக் காரணம் காட்டி செய்ய மறுத்து முகம் சுருங்க வைத்ததும்...
அக்கம் பக்கத்தாரிடம் பேச பல விஷயங்கள் இருந்தும், நேர மேலாண்மை கருதி முகமன் தவிர்த்ததும்...
"காப்பு கட்டியாச்சு... யாரும் வெளியே போகக் கூடாது, உள்ளேயும் வரக்கூடாது..." என்று கிராமத்து பூசாரி கூறியதை எள்ளி நகைத்ததும்...
சுத்தம் கருதி "கால்களைக் கழுவி உள்ளே வா..." என்ற பாட்டியைப் பத்தாம் பசலியாய் பரிகசித்ததும்...
ஓரிரு நாட்களில் மாறிப்போனது. மாற்றியது அணுவினும் சிறிய ஓர் கிருமி..!
அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.
சுயநல மனிதாபிமானத்துடன் பணிப்பெண்ணுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்தாகி விட்டது.
மகளுடன் சதுரங்கம் விளையாடி ஆகிவிட்டது.
மகனுக்குச் சுவையான காய்கறி புலாவ் செய்து பரிமாறியாகிவிட்டது.
சுற்றத்துடன் நலம் விசாரித்தாகி விட்டது.
விடுமுறை என்றாலே வெளியே சுற்றிய கால்களுக்கு சுய காப்பு கட்டியாகி விட்டது.
காலையும் கையையும் தேய்த்து கழுவியதில் பாட்டி சொல்லே மந்திரமாகி விட்டது.
ஆனால்...
இந்த மாற்றங்கள் நிகழ ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது - உடன் சில உயிர்ப்பலிகளும்.
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, வெள்ளப் பெருக்கு, விதவிதமான பெயர்கள் கொண்டு விரைந்து வரும் புயல்கள் போன்றவற்றால் ஏற்படும் சில உயிர்ப்பலிகளே, நமக்கு 'ஞான குருவாய்' நின்று மாற்றத்திற்கான உந்து சக்தியாய் உருவெடுக்கின்றன.
இன்றோ... கண்ணுக்குத் தெரியா ஒரு கிருமி நமக்கு இன்னொரு பாடம் கற்பித்துக் கொண்டு இருக்கிறது. நாம் செய்த நல்லனவும் அல்லனவும் கண்முன் விரிகின்றன.
இயற்கையின் சவால்கள் தீரும் வரை மட்டுமே நீளும் இம்மாற்றம் பின் மறைந்து மனம் என்னும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுகிறது.
நல்லதோர் வீணையைத் தந்த பூமித்தாயை நலங்கெட புழுதியில் எறிந்து விடுகிறோம். இயற்கை மீதும் பிற உயிர்கள் மீதும் அக்கறை காட்டுவதை மறுக்கிறோம் - மறக்கிறோம்.
இன்று... இப்பொழுது இந்த நொடியை சுவைத்து வாழவேண்டிய நாம் நாளை நோக்கியே பயணப் படுகிறோம்.
நாளை என்ற தேடலில் இன்றைத் தொலைக்கிறோம்.
'மாறுவதெல்லாம் உயிரோடு - மாறாதது மண்ணோடு' என்பதை ஒரு நோய்க்கிருமி நமக்கு இன்று கற்பித்து விட்டது.
இனியும் உயிர்ப் பலி இல்லா மாற்றத்துக்கு மாறுவோம்.
இந்த ஓய்வில் அதிகம் சிந்திப்போம்.
மாறுவோம் - மாற்றத்தை ஏற்படுத்துவோம்..!
ReplyForward
|
Comments
Post a Comment