Skip to main content

சீன தாவோயிசமும் (தாவோ தே ஜிங்) இந்துமத இறை தத்துவங்களும்..! - ஓர் ஒப்பாய்வு


'தாவோ தே ஜிங்'  (TAO TE CHING) என்பது சீன செவ்வியல் மெய்யியல் (தத்துவ) நூலாகும். இந்நூல் 'லாவோ சீ' (லாவோட்சு) என்ற தத்துவ ஞானியால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 'டாவோயிசம்' அல்லது 'தாவோயிசம்' என்ற மெய்யியல் கோட்பாட்டிற்கு அடித்தளமான நூல் இது. உலக இலக்கிய தத்துவ நூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது விளங்குகிறது.

தாவோ - வழி
தே - நேர்மைக்கு உந்துதல்
ஜிங் - நூல் 

நடைமுறை வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய அருமையான நூல் இது. இந்நூல் கருத்துக்களை மேலோட்டமாகக் காணும்பொழுது பொருள் அற்றதாகவும் மிக இயல்பானதாகவும் தோன்றினாலும் ஆழ்ந்து உணர்ந்து நோக்கும்பொழுது இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் நம்மை மெய்ஞான வழிக்கு அழைத்துச் செல்வதாய் அமைந்துள்ளது.

தாவோயிச நெறிமுறைகளாக 'கருணை, அடக்கம், பணிவு' என்பனவும் தாவோயிச சிந்தனைகளாக 'நலம், நீண்ட வாழ்நாள், இயல்புச் செயல்பாடு' ஆகியவையும் கூறப்பட்டுள்ளன. 'செயல்படாமையின் வேதநூல்' என்று இது வர்ணிக்கப் பட்டாலும் உற்றுநோக்கும் போது இன்றைய நாகரிக நடைமுறை வாழ்வுக்குப் பொருத்தமான கோட்பாடாக இது விளங்குகிறது.

தாவோயிச கோட்பாடுகள் பல்வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்ட இந்து மத இறை தத்துவங்களுடன் எவ்வாறு பொருந்துகிறது என்று பார்ப்போம்.

தாவோயிசம் கூறும் 'செயல்படாமை' என்பது இயற்கையின் போக்கில் நம்மை செலுத்துவது என்றும், இயற்கைக்கு மாறாகச் செயல்படாமை என்றும் பொருள் கொள்ளப்பட வேண்டும்.

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய சிந்தனைத்திறன் குறைந்து மனம் அமைதியடைய மறுக்கிறது. உடல் சோர்வடைகிறது. செயல்படாது அமைதியாக இருக்கும் பொழுது உடலும் மனமும் ஓய்வுபெற்று அதீத வேகத்துடன் இயற்கையாகச் செயலாற்றத் தொடங்குகிறது. இதன் மூலம் சிறிய அளவு முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடிகிறது. நாம் செய்யும் அன்றாடப் பணிகளிலிருந்து சாதனை படைக்கும் மிகப்பெரிய செயல்கள் வரை இக்கோட்பாடு மிகப்பொருத்தமானதாக விளங்குகிறது.

இதே கருத்து வள்ளலார் பெருமான் அருளிய 'திருவருட்பா' பாடலிலும் பிரதிபலிக்கிறது. அப்பாடலாவது...

'இன்று வருமோ நாளைக்கே வருமோ
அல்லது மற்றென்று வருமோ அறியேன்
எங்கோவே... துன்றுமல வெம்மாயை அற்று
வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்...'

இங்கு, 'சும்மா இருக்கும் சுகம்' என்பது 'ஆன்மாவானது வெளிகள் பல கடந்து உடலுடன் சேரும் நிலை'யைக் குறிக்கிறது. உடலும், மனமும் சும்மா இருக்கும்போது மட்டுமே ஆன்மா உடலுடன் கலந்து இறையடியை அடைய முடியும். அலைபாயும் மனம், ஞான தவம் செய்ய இயலாது.

'உன்னைப் பற்றி அறிவது உண்மையான ஞானம்' என்ற தாவோயிச கோட்பாடு இங்கு பொருந்துகிறது.

'என்னை அறிந்திலேன் - இத்தனைக் காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்...'
என்ற திருமந்திரப் பாடலில் திருமூலரின் கூற்றும் இதை மெய்ப்பிக்கிறது.

'உன்னையே நீ அடக்கி ஆள்வது உண்மையான வல்லமை' என்ற 'லாவோட்சு'வின் கோட்பாடு, 'உன்னை நீ அறிவதே இவ்வுலகிற்குச் செய்யும் தொண்டு' என்ற மகான் ரமண மகரிஷி அவர்களின் அற உரையோடும் பொருந்துகிறது.

உடல் என்பது அழியக்கூடியதாயினும் அது ஆன்மா குடியிருக்கும் வீடாகிறது. எனவே உடலைப் பேண வேண்டியதின் அவசியத்தை 'உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே...' என்று கூறுகிறார் திருமூலர். இக்கருத்து 'நலம் மிகப்பெரிய சொத்து' என்ற தாவோயிச சிந்தனையுடன் ஒப்புமை உடையதாகிறது.

'தண்ணீர் மிக மென்மையானது. அது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் தாழ்வான இடங்களிலும் பாய்கிறது. கடினமான பாறைகள் நாளடைவில் நலிந்து சிதைந்து சிதறிப் போகின்றன...' என்ற லாவோட்சுவின் கருத்து கருணையையும், மென்மையையும் போதிக்கின்றன.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி, பசித்திருக்கும் உயிருக்குப் பசியாற்றும்' ஜீவகாருண்ய ஒழுக்கம் கண்ட வள்ளலார் கூறிய நெறியும் இதுவே.

'மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும், பலனையும் தரவல்லது. அன்றி, வெறும் காட்டுமிராண்டித்தனமோ, உடம்பின் வலிமையோ அல்ல...' என்ற சுவாமி விவேகானந்தருடைய கூற்றும் இதை மெய்ப்பிக்கிறது.

'எளிமை, கருணை, இன்சொல்' மூன்றும் உலகத்திற்கான புதையல் என்ற லாவோட்சுவின் கருத்துகளும், 

'யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை...
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை...
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி...
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே...' என்ற திருமூலரின் திருமந்திரப் பாடலும் ஒத்த உணர்வுடையதாய்த் திகழ்கின்றன.

'மௌனம் பழகு' என்ற வள்ளலாரின் அறிவுரையும் 'மவுனம் வலிமையின் சிறந்த உற்பத்தி இடம்' என்ற லாவோட்சுவின் தத்துவமும் ஆற்றலைச் சேமிப்பதுடன் துன்பங்களைத் தவிர்த்தலுக்குமான உந்துதலைத் தருகிறது.

'அண்டம் என்பது இயல்பான ஒரு வழி. மனிதன் அதன் வழியை ஒத்துப்போகும்போது முழுமை அடைகிறான். உற்று நோக்கினாலும் எதைப் பார்க்க முடியவில்லையோ அது வெறுமை. செவிமடுத்தாலும் எதைக் கேட்க முடியவில்லையோ அது அரிது...' என்ற தாவோயிச சிந்தனை மிகப் பெரிய ஆன்மீகப் பாதையை நமக்குக் காட்டுகிறது.

இறைவன் அண்டமாய் விளங்குபவன். காணற்கு இயலாதவன். கேட்பதற்கு அரிதானவன். அனைத்தையும் கடந்தவன். அருவமாய் நிற்பவன் - அவனை மனதால் மட்டுமே உணர முடியும். இதையே லாவோட்சு கூறும் கவிதை விளக்கம் நம்மை உணர வைக்கிறது.

ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைந்தாலும் சக்கரத்தின் பயன் அதன் வெற்றிடப் பகுதியால் கிடைக்கிறது. பாண்டம் பாண்டமாக களிமண் வனையப்படினும் பாண்டத்தின் பயன் அதன் வெற்றிடத்தில் கிடைக்கிறது. வாயிலுக்காகவும், சன்னலுக்காகவும் விடப்படும் வெற்று வெளியே பயன்படுத்தப்படுகிறது.

இருத்தலின் பயன் ஒருபுறம் இருக்க இருத்தலின்மையின் பயன் மற்றொன்றாகிறது. இருப்பதுவும் இல்லாதிருப்பதுவுமான இரண்டு நிலைகளுக்கு இடையேயான வாழ்க்கையில் ஒரு பிடியிலிருந்து பிறிதொன்றை எட்டிப்பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்வின் உருவத்தை நமக்கு வரைந்து காட்டுகின்றன. 'உண்டு' என்ற சிந்தனையே பயனுள்ளது என்ற கருத்தை மறுக்கும் தாவோயிசம் எந்த ஒன்று உருவாக வேண்டுமெனினும்  'உண்டு' மட்டும் போதாது; ' இல்லை' யும் வேண்டும் என்கிறது.

நம் பார்வையில் படும் உருப்பொருட்கள் உண்மை எனினும் உருவமல்லாத வெற்றிடமே நமக்குப் பயனுடையதாகிறது. எனவே 'இன்மை'யைப் புறக்கணிக்கக் கூடாது என்கிறார் லாவோட்சு. இக்கருத்து இந்துமத இறைக் கொள்கையில் பெரிதும் பிரதிபலிக்கிறது.

'அண்டமாய் அவனி யாகி அறியொணாப் பொருளதாகி...'  - ஷண்முகக் கவசம் (பாம்பன் சுவாமிகள்)

'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் ஜோதியை யாம் பாட...' - திருவெம்பாவை (மாணிக்கவாசகர்)

'அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அருவுருவாய்...' - அம்பிகை அந்தாதி (அம்பர் காவலன் சேந்தன்)

'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே...' - திருவாசகம் (மாணிக்க வாசகர்)

இக்கருத்துக்கள் அனைத்துமே இறை தத்துவத்தையும் பிரபஞ்ச உண்மையையும் நமக்குத் தெளிவாக்குகிறது.

'மகிழ்ச்சியாக வாழ்தல்' என்பதே தாவோயிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. இக்கருத்து,

'எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று
அறியேன் பராபரமே...' - பராபரக்கண்ணி (தாயுமானவர்) என்ற பாடலோடும், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...' என்ற திருமூலரின் கருத்தோடும் ஒப்புடையதாய் விளங்குகிறது.

தாவோயிச கோட்பாடுகள் அனைத்துமே கட்டளைகளாக பிறப்பிக்கப்படாமல் இயல்பான கருத்துக்களாக போதிக்கப்படுவது இதன் எளிமைத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.

சீனத்தைச் சேர்ந்த 'லாவோட்சு' என்ற ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய ஞானியின் கைப்பிடித்து நாம் இன்றைய நடைமுறை வாழ்வில் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகிறது *'தாவோ தே ஜிங்'* என்பது மிகையல்ல.    

- உமா

Comments

  1. அருமையான படைப்பு

    ReplyDelete
  2. அற்புதம்.
    அம்பிகை அந்தாதியைப் பற்றிய விபரங்கள் கிடைக்குமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...