வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...! - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...