வெள்ளத்தால் போகாது
வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்கோ மிக அரிது
காவலோ மிக எளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க
உலகெலாம்
பொருள் தேடி உழல்வதேனோ...! - விவேக சிந்தாமணி
திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம்.
அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல.
கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன.
'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு.
'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி.
கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும்.
அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களையும் மேற்போக்காக, நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து கற்க வேண்டும்.வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து சுவைத்துக் கற்க வேண்டும். பழுதில்லாமல் கற்க வேண்டும். பொழுது போக்கிற்காக,வேடிக்கைக்காக நூல்களைக் கற்பது வீண்முயற்சி. எனவே,வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆராய்ந்து கற்க வேண்டும். அப்போது மட்டுமே கற்ற கல்விக்குத் தக்கவாறு நன்னெறியில் நிற்க முடியும்.
இதையே வள்ளுவர் ,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.(391)
என்று கூறுகிறார்.
முகத்தில் உள்ள இரண்டு கண்களும் நிகழ்காலத்தைக் காண உதவும். எல்லாக் காலங்களையும் ஆராய்ந்து காண்பதற்குப் பயன்படுவது கல்விக்கண் ஆகும். எனவே, கற்றோரே கண்ணுடையவர்கள். கல்வி கற்க உதவாதபோது,முகத்தில் உள்ள கண்கள் புண்களாகக் கருதப்படுமேயன்றி வேறு பயனில்லை என்கிறார் வள்ளுவர். எண்ணாகிய கணிதமும், எழுத்தாகிய மொழிப் புலமை மற்றும் அறிவியல் அறிவும் கண்களாக எண்ணத்தக்கவை. இக்கருத்தையே, எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு.(392)
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.(393) முதலிய
குறட்பாக்களால் விளக்குகிறார் வள்ளுவர்.
மணலில் தோண்டிய கேணி, தோண்டத் தோண்ட நீர் ஊறும்.கற்கக் கற்க,கல்வியின் அளவுக்கு ஏற்றபடி மக்களுக்கு அறிவு வளரும். எனவே,மேன்மேலும் கற்க வேண்டும். மணலடியில் நீர் உள்ளது. ஆயினும் தோண்ட வேண்டும். அறிவும் மக்களுக்கு இயல்பாக அமைந்துள்ளது. ஆயினும் கற்றால்தான் அந்த அறிவு வெளிப்படும். உளநூலார் கருத்துப்படி 'அறிவு வெளியே இருந்து உள்ளே புகுத்தப்படுவது அன்று;உள்ளே இருந்து விளக்கிக் கொண்டு வரப்படுவது' ஆகும்.
இதையே வள்ளுவர்,
தொட்டனைத் தூறும் மணல்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.(396)
என்கிறார்.
கல்லாதவனுக்கு உலகத்தில் உள்ள தொடர்பு பிறப்பால் ஏற்படும் தொடர்பே. பிறந்த ஊரும் பிறந்த நாடும் அவனுக்குத் தொடர்புடைய இடங்கள். ஆனால் கற்றவனுக்குப் பிறப்பால் அமைந்த தொடர்போடு கல்வியறிவால் பெறும் தொடர்பும் உள்ளது. அவன் கற்ற கல்வியின் பெருமையால் மற்ற ஊர்களும் நா டுகளும் அவனைப் போற்றி நாடும். எனவே, வெளிநாடுகளும்,வெளியூர்களும் அவனுக்குத் தொடர்புடைய இடங்களே ஆகும். இக்கருத்தை,
யாதானும் நாடாமால் ஊராமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு.(397)
என்ற குறட்பா மூலம் நிறுவுகிறார், வள்ளுவர்
.
பொருட் செல்வத்தை விடக் கல்விச் செல்வமே விரும்பத்தக்கது. சிறப்பாக எண்ணப்படுவது.செல்வத்தைச் சேர்ப்பதிலும் காப்பதிலும் இழப்பதிலும் துன்பம் உள்ளது. ஆனால்,கல்விச் செல்வத்தால் கற்றோரும் இன்புறுவர்.அக்கல்வியைப் பெறுவோரும் இன்புறுவர். கல்வி என்னும் ஒரு துறையில்தான், தாம் இன்புறுவதே உலகத்தாரின் இன்பமாகவும் அமைந்துள்ளது. எனவே தான் கற்றவர்கள் கல்வியை மென்மேலும் போற்றுகிறார்கள். கல்வி போல் அழிவில்லாமல் நிலைக்கக்கூடிய செல்வம் வேறு இல்லை. கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் வளரும் கேடில்லாச் செல்வம் கல்விச்செல்வம். இக்கருத்தைக் கீழ்க்கண்ட குறட்பாக்கள் தெளிவாக இயம்புகின்றன.
தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்.(399)
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.(400)
கல்வியைக் கற்றல் ஒரு வகையான இன்பம்,கற்ற கல்வியை, ஒத்த உணர்வுடையரோடு உரையாடி மகிழ்தல் மற்றொரு இன்பம். இதன் மூலம் சிந்தனைகள் பரிமாறப்பட்டு அறிவு செழித்து மேன்மை அடைகிறது. அப்படிப்பட்ட கல்வியாளர்களுடன் மகிழ்வாகக் கூடி உரையாற்றலும்,'இனி இவரை என்று காண்போம்' என நினைக்கும்படி பிரிதலும் கற்றோரின் உணர்வாகும். இதையே வள்ளுவர்,
உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.(394) எனப் போற்றுகிறார்.
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.(395)
.
செல்வந்தர் முன் ஏழை நிற்பது போலக் கற்றவர் முன் கல்லாதவர் பணிந்து நிற்பர். ஏனெனில் கற்றவரை உயர்ந்தவராகவும் கல்லாதவரைத் தாழ்ந்தவராகவும் கூறுகிறார் வள்ளுவர். மேற்கண்ட குறட்பா இக்கருத்தைத் தெளிவாக்குகிறது.
ஒருமைக்கண் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.(398)
ஒரு பிறப்பிலே கற்ற கல்வியானது, எழுகின்ற ஏழு பிறப்புக்களிலும் உதவி செய்யும் தன்மை உடையதாகும். ஒரு பிறவியில் கற்ற கல்வி எப்படி ஏழு பிறவிகளிலும் துணை செய்யும்? ஒரு பிறவியில் கற்ற கல்வி மூலம் அறிவு செழுமை பெறும்.நற்சிந்தனை உண்டாகும். வாழ்வு அறத்தை நோக்கி மேம்படும். இயல்பாகவே அப்படி மேம்படும் பொழுது ,மனித உயிர்கள் பிறவிப்பயன் எய்தும். அது ஏழு பிறவிக்கும் துணை செய்யும்.
இத்தகைய சிறப்புகள் பெற்ற கல்வியைக்
கற்று,அளவிலா சிறப்புகளைக் கொண்ட கல்விச் செல்வத்தின் சிறப்புகளை அறிந்து வாழ்வை வளமாக்குவதோடு அறிவை விரிவு செய்வோம்...!
Excellent Uma...There is no better book than THIRUKKURAL..It guides us in all walks of life..You took the best ones & gave a fantastic explanation..
ReplyDeleteமிக அருமையான பதிவு. அருமையான விளக்கம்.
ReplyDelete