கண்ணோட்டம் (இரக்கஉணர்வு)
பாசம்,கருணை,காதல்,பரிவு எனும் பல சொற்களாலும் உணரப்படும் உணர்வு அன்பு. அன்பு செலுத்தப்படும் இடத்தைப் பொறுத்து சொற்களின் பொருளும் மாறுபடுகிறது. இவை அனைத்திற்குமே அடிப்படையாக விளங்குவது இரக்கஉணர்வு என்னும் கண்ணோட்டம்.
தொடர்பில்லாத உயிர்கள் மீதும் கருணையும் இரக்கமும் காட்டக் கற்றுத் தருபவை நம் அறநூல்கள்.
தொடர்புடையோரிடத்தும் அது தொடருமாயின் வாழ்வில் சிக்கல் என்பதேது? அமைதியான அகவாழ்வுக்கும் பண்பட்ட புறவாழ்வுக்கும் அடிப்படையே கண்ணோட்டம் எனும் இரக்கஉணர்வு.
இதையே வள்ளுவர்,
கண்ணோட்டம் என்னும் கழிப்பெருங்காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு(571)
எனக் கூறுகிறார். (கழிப்பெருங்காரிகை_ மிகச்சிறந்த அழகு)
தொடர்புடையோரிடத்து நெகிழ்ந்து நடக்கும் இப்பண்பே மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவதோடு சிறந்த அழகாகவும் விளங்குகிறது.அதனாலேயே இவ்வுலகம் நிலைபெற்று வாழ்கிறது. இந்நெகிழ்தல் பண்பு இல்லையானால்,ஒருவரை ஒருவர் சீறுவதும்,சிதைப்பதுமே வாழ்க்கையாக இருக்கும்.ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையிலேயே உள்ளத்தின் நெகிழ்ச்சி புலப்படும். மக்களுக்குப்பிறவியிலேயே இந்தக் கண்ணோட்டம் அமைந்திருக்கிறது. அதனாலேயே மக்கள் கூடி வாழ்ந்து பழக முடிகின்றது.
பகையும் பூசலும் மக்களுக்குரிய இயற்கைப் பண்பு அன்று. தன்னலம் மிக்க சிலரின் தூண்டுதலால் வெறியூட்டலால் ஏற்படும் மாற்றமேயாம். தன்னலம் உடைய அவர்களைத் தலைமை ஏற்காமல் செய்ய வல்ல அறிவும் ஆற்றலும் ஏற்படுமாயின் இவ்வுலகு கண்ணோட்டத்தின் வழி செல்லும்.
தம்மை வலியதாய் நினைக்கும் புலியை ஒத்த கொடிய விலங்குகள் ஒன்றை ஒன்று காணும்பொழுது உறுமும்.வலிய விலங்குகளைக் கண்டால் நடுங்குவதும் வலி குன்றிய விலங்குகளைக் காணின் ஓடி ஒளிவதும் அவற்றின் இயல்பு.ஆனால் மான், முயல் முதலானவை எவ்வளவோ தீமைகளுக்கும் அழிவுகளுக்கும் இடையிலும் பெருகி வாழ்ந்து வருகின்றன. புலிகளைப் போல் குகைகளிலும் கற்பாறைகளிலும் ஒதுங்கிப் பதுங்கி வாழ்வதில்லை. வெட்ட வெளியில் வாழ்ந்து மகிழ்கின்றன. மக்கள் வாழ்வும் இப்படிப்பட்டதே. பிறரோடு பழகி கண்ணோட்டம் உடையவராய் இணைந்து வாழ்வதே மக்கள் பண்பு. இக்கண்ணோட்டம் எனும் பண்பே சமுதாயம் அமைத்து வாழ வழி வகுத்தது.
சில தந்திரவாதிகளின் கேடுகளுக்குச் சமூகம் இரையாகி அழிவுபடினும், பின்வரும் சந்ததியருக்குக் கண்ணோட்டம் என்னும்
அப்பண்பு அழிவுபடவில்லை.
கண்ணோட்டத்து உள்ளது உலகியல்;அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.(572)
என்ற குறள் மூலம் ,
கண்ணோட்டம் எனும் பண்பினாலேயே இவ்வுலகம் இன்றும் அழியாமல் இருக்கின்றது. எனவே,அப்பண்பு இல்லாதவர்களால் பூமிக்குப் பாரமே அன்றி அவர்களால் வேறு பயன் இல்லை என்ற கருத்தை நிறுவுகிறார் வள்ளுவர்.
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.(573)
இசையும் பாட்டும் செவிக்கு இன்பமளித்து மனதிற்குப் புத்துணர்வூட்டும். ஆனால் இசையும் பாட்டும் ஒன்றோடொன்று பொருந்தாவிடின் ஏது பயனும் இல. அது போலவே கண்ணோட்டம் இல்லாத கண்களால் பயனில்லை. இப்பாடலில் உட்கருத்தும் ஒன்று உணரப்படுகிறது. இசையில்லாமல் பாட்டும், பாட்டில்லாத இசையும் செவிக்கின்பம் அளிப்பதில்லை. அதுபோல இல்லறம் சிறக்க கணவன் மனைவி உறவும் அத்தன்மையதாய் விளங்குதல் வேண்டும். அதற்கு இன்றியமையாத பண்பு கண்ணோட்டம் ஆகும்.
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.(574)
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும்.(575)
மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.(576).
தகுந்த அளவினாலான கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் இருப்பது போல் தோன்றினும் அதனால் எப்பயனும் இல்லை.இவ்வளவு சிறப்புடைய `உள்ள நெகிழ்ச்சி' கண்ணில் புலனாவதால் கண்ணைச் சிறப்பித்து,அந்தக் கண்ணோட்டமே `கண்ணுக்கு அணிகலன்` என்றும்,அது இல்லாத கண்,`நோய் தரும் புண்ணே` என்றும், அப்படிப்பட்ட பயனற்ற கண்ணை உடையவர்கள் உணர்ச்சியற்ற கணுவை உடைய மரம் போன்றவர்கள் என்றும் கூறுகிறார் வள்ளுவர்
.
கண்ணோட்டம் இல்லவர்கண் இலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.(577)
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவர் ஆவார். கண் உள்ளவர் கண்ணோட்டம் இல்லாதவராய் இருப்பதில்லை என வள்ளுவர் கூறுவதிலிருந்து கண் என்ற உறுப்பு பிறர் நிலை கண்டு இரக்கப்பண்பு கொள்ளவே படைக்கப்பட்டதாகிறது.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.(578)
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை(579)
ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள தலைவன் பொதுக் கடமைகளைத் தான் மேற்கொள்ளும் போது, பழகியவர்களும் சில வேளைகளில் இடையூறு செய்ய முற்படுவர். அவர்கள் மேல் சினம் கொண்டாலும், பழக்கத்தினால் உள்ளம் நெகிழ்ந்து நிற்கும். இடையூறு செய்பவரிடத்தும், தான் மேற்கொண்டுள்ள கடமை கெடாதவாறு கண்ணோட்டம் உடையவனாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகிறார் வள்ளுவர். ஒரு சில வேளைகளில் இடையூறு செய்பவர்கள் அளவுக்கு மீறிச் செயல்படினும் தன் அதிகாரத்தைக் கொண்டு அவர்களைத் தண்டிக்காமல் பொறுமை கொண்டு கண்ணோட்டம் உடையவனாய் இருத்தல் நலம்.
மற்றவர்க்குத் தீமை செய்தால் அந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று செங்கோன்மையில் கூறிய வள்ளுவர், இங்கு இவ்வாறு கூறுகிறாறே என்ற ஐயம் நமக்கு ஏற்படும். இங்கு வள்ளுவர் கூறுவது தலைவனுக்கே இடையூறு செய்பவரைப் பற்றியதாகும். தான் தலைவன் என்ற உயர்நிலையில் இருக்கும்பொழுது பெருந்தன்மையுடன் கண்ணோடுவது சிறப்பு என்கிறார் வள்ளுவர்.
இதன் மூலம் தவறு செய்பவர்களும் திருந்த வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஒரு வேளை அவர்களில் சிலர் திருந்தாமல் ,மேன்மேலும் பொறாமை கொண்டு தீங்கு செய்வார்களானால் அப்போதும் கண்ணோட்டமே சிறந்தது என்று கூறுகிறார் வள்ளுவர்.
பெயக்கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்(580)
எல்லோராலும் விரும்பத்தக்க நாகரிகம் உடையவர், பழகுகின்றவர் தமக்கு நஞ்சு இடுவதைக் கண்ணால் கண்டாலும்,கண்ணோட்டத்தால் அதை மறுக்க முடியாமல் அதை உண்டு அமைதியுறுவர் எனக்கூறுகிறார் வள்ளுவர்.
இப்படி அமைதி அடைவதை நல்லது என்று மட்டும் வள்ளுவர் கூறவில்லை. விரும்பத் தகுந்த நாகரிகம் கொண்டவரது செயல் எனக் கூறுகிறார்.நாகரிகம் என்பது மனப்பண்பாட்டையே இங்குக்குறிக்கிறது.
திருவள்ளுவரும் அவரை ஒத்த சான்றோர்களும் புறவாழ்வில் நிகழும் மாறுதல்களை நாகரிகமாகக் கருதவில்லை. அகவாழ்வில் ஏற்படும் நல்ல பண்புகளையே,நெஞ்சின் உயர்நிலைகளையே நாகரிகத்தின் கூறுகளாகக் கருதுகின்றனர்
. இதற்குச் சான்றாகத் தமிழ்நாட்டிலிருந்து சீனா சென்று,அம்மக்களுக்குத் தற்காப்புக் கலை,மருத்துவம், நாகரிகம் ஆகியவற்றைக்கற்பித்து,அவர்களாலேயே நஞ்சளித்து தீமையுற்ற போதிதர்மரின் பெருந்தன்மையைக்
கூறலாம்.
பிறர் செய்யும் குற்றம் தெரிந்தும்,அவர் மனம் வருந்தாமல் இருக்க வேண்டும் என்று தம் வருத்தத்தை மறைப்பதே நாகரிகம் என்னும் பண்பாடாகிறது. தமக்குத் தீங்கு இழைக்கும் ,குற்றம் செய்வாரிடத்தும் வெறுப்பும் சினமும் கொள்ளாமல் அவரைத் தண்டிக்காமல் இருக்கும் பண்பு,பொறுமையோடும் பெருந்தன்மையோடும் அவர்களோடு பழகும் பழக்கம் ,இவற்றை எண்ணிப் பார்க்கும் பொழுது மனப்பண்பாடு என்னும் நாகரிகத்தைப் படிப்படியாக அளந்தறிவது போல் தோன்றுகிறது.
கண்ணோட்டமே அதை அளந்து அறியும் கருவியாகவும் விளங்குகிறது.
Great flow of thoughts Uma..
ReplyDelete