சங்ககால இலக்கிய மாந்தர்களான
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
அதியமான் - ஒளவையார்
பாரி - கபிலர்
ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற நட்பினைப்
பறை சாற்றுவோராவர்.
'ஒருவர் பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது.
நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும்,
'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.
நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு. (நாலடியார் 218)
நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா பண்பினராய் இருப்பர்; அப்படிப்பட்ட நட்பினால் எந்தவொரு பயனும் இல்லை; வயலால் தனக்கு எந்தவொரு பயனும் இல்லை எனத் தெரிந்தாலும் தூரத்திலுள்ள நீரைக் கொணர்ந்து, வயலை விளைவிக்கும் வாய்க்காலைப் போன்ற பண்பினராய் அமைவோர் சிலர். அப்படிப்பட்ட நட்பினை நாம் நாடிப் பெறுதல் வேண்டும்.
நாம் பழகக்கூடிய நண்பர்கள் பலரும் ஒரே மாதிரியான தன்மையுடன் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தன்மையுடன் காணப்படுகின்றனர், என்பதையும் அழகான உவமைகளோடு விளக்குகிறது மற்றொரு பாடல்;
கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான் று
இட்டதே
தொன்மையுடையார் தொடர்பு. (நாலடியார் 216)
நாள்தோறும் தண்ணீர் ப்பாய்ச்சினால் மட்டுமே பயன்தரும் பாக்கு (கமுகு) மரம் போன்று தினமும் உதவி செய்தால் மட்டுமே பயன்படுபவரின் நட்பு 'கடை' நட்பாகும். விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தாலும் போதும் என்ற நிலை கொண்டது தென்னை மரம் (தெங்கு) அனையது ' இடை' நட்பு. அவ்வப்போது உதவி செய்தலால் பயன்படுவர். விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் (பெண்ணை) போன்ற நட்பே 'தலை' நட்பு. இப்படிப்பட்ட நட்பே தொன்மை தொடர்புடைய நட்பாகும்.
Really a new information regarding friendship. What a explanation about panai maram & vaikkal. Enjoyed.
ReplyDeleteமனதைத் தொடும் அருமையான உவமைகள். மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன். வாழ்க வளமுடன்.....
ReplyDeleteஎன்றென்றும் அன்புடன் சங்கீதா
மிகவும் அருமையான வரிகள். 👌🏻
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteநட்பிற்கு சரியான விளக்கம்.
ReplyDelete