Skip to main content

‘ஐ ’என்றால் அவள் அழகு…! (உண்மைக் கதை)

வெள்ளிக்கிழமை வழிபாடு முடித்து,  அமர்ந்த போது தொலைபேசி அழைத்தது.

அம்மா….! இன்னும் 10 நிமிஷத்துல வந்திடுவேன். ‘ டின்னர்’ ரெடியா இருக்கா? செம்ம பசி…..ம்ம்…என்ன ‘டின்னர்?’ என்றான் மகன்.

‘சப்பாத்தி, பனீர்’….தயாரா இருக்கு…

சூப்பர்…அப்புறம் ..அம்மா….உங்களுக்கு ஒரு பரிசு கொண்டு வரேன்…

பரிசா… என்னது?

சஸ்பென்ஸ்…

‘10 நிமிஷத்துல தெரியப் போகுது…..சொல்லுடா…’ என்றேன்.

‘அதான் 10 நிமிஷத்துல தெரியப் போகுதுல…..காத்திருங்க’ என்றான் மகன்.

                                                              ***

என்ன பரிசாக இருக்கும்…? …. பல ஊகங்கள் தோன்றினாலும் , பிறந்த நாள், திருமண நாள், அன்னையர் தினம் என்ற எந்தச் சிறப்பு தினமும் இல்லாமல் எதற்குப் பரிசு…? என்ன பரிசு…?

வழக்கம் போல் தலைக்குள் உள்ள இராட்டினம் சுற்ற ஆரம்பித்தது…. இன்னும் 10 நிமிஷம்  இந்த இராட்டினம் நிற்காமல்  சுற்றுமே!

சரி…. அது தன் வேலையைச் செய்யட்டும் ….அதற்குள் மாடிக்குச் சென்று,அடுத்த நாள் பள்ளிக்கு உடுத்திச் செல்ல தேவையான உடைகளையும், அதற்கேற்ற அணி மணிகளையும் எடுத்து வைத்து விடலாம்…..

                                                                   ***

அம்மாஆஆ…. என்று அழைத்தவாறே, கையில் தலைக்கவசத்துடன் மாடிக்கு வந்தான் மகன் ஆதி .

 ‘ ஹெல்மெட்டை ஏம்மா மாடிக்குக் கொண்டு வந்த?.....என்று கேட்டவாறே அருகில் சென்றேன் நான்.

 ஹெல்மெட்டுக்குள் சிறு கை கால்களுடன் கருப்பு வெள்ளை நிறத்தில் கண்களைத் திறந்தும் திறக்காமல் இருந்தாள்….’ஐ’.

‘ஐ’ …அதுதான் நான் அவளுக்கு வைத்த பெயர்…

‘ஐ’ குட்டியைக் கண்டவுடன் என் மனம் அடைந்த பரவசத்தையும் முகத்தில் தோன்றிய ஒளியையும் கண்டு சிரித்தான் ஆதி.

‘எங்கிருந்து கொண்டு வந்தே, ராஜா…? ரொம்ப அழகா, நம்ம வீட்டுக்கு மேச்சா…கருப்பு,வெள்ளை நிறத்துல இருக்கு…! ‘

‘வரும் வழியில், தெருவில் தனியா நின்னுகிட்டு இருந்ததுமா…கொஞ்ச நேரம் நின்னு பார்த்தேன்…வேறு எந்த நாயுமே இல்லை…இதோட அம்மாவும் அங்கு இல்லை…ஓரமா கொண்டு போய் விட்டாக்கூட நடுத்தெருவில் வந்து நிக்குது…அப்படியே விட மனசு வரல…யாராவது இருட்டுல பார்க்காம வண்டிய ஏத்திட்டாங்கன்னா…அதான் கொண்டு வந்துட்டேன்….நம்மளே வச்சுக்கலாம்மா…’ என்றான் ஆதி.

ஆசையா தான்டா இருக்கு… ஆனா அப்பா என்ன சொல்லுவார்ன்னு தெரியலையே…

ப்ளீஸ்மா…நான் பார்த்துக்கறேன்… வீட்டுக்குள்ளயே வச்சு வளர்க்கலாம்மா…

‘அப்பாவ சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு … எனக்கும் ஆசையா தான் இருக்கு…’ என்றேன்.

அலைபேசி அழைத்தது…மறுபுறம் கணவர் .

‘என்னம்மா ஆதி வந்தாச்சா? சாப்பிட்டீங்களா? அம்மா,அப்பா சாப்பிட்டாங்களா? வரும்போது ஏதாவது வாங்கிட்டு வரணுமா?’

வழக்கமான வினாக்கள்…விசாரிப்புகள்…

எல்லாவற்றுக்கும் பதில் கூறிவிட்டு, அலைபேசியை வைத்தேன்.

 குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்த ஆதி ‘அப்பாகிட்ட சொல்லலையாம்மா?’ என்று கேட்டான்.

‘½ மணி நேரத்துல வந்துடுவார்… வந்து தெரிந்து கொள்ளட்டும்…பசின்னு சொன்னியே…போய் குளிச்சிட்டு வா!.. மாடிக்கே டிபன் எடுத்துட்டு வந்திடறேன்… இவளுக்குப் பாலும் கொண்டு வரேன்…

தாத்தா பாட்டி சாப்பிட்டாச்சா?

ஆச்சுப்பா…

                                                             ***

நாங்கள் இருப்பது’ டியூப்லெக்ஸ்’ வீடு. சமையலறை கீழே என்பதால்  வேலைகளை முடித்து, உணவருந்தி விட்டு மாடிக்குச் செல்வது வழக்கம். சில நாட்கள் வழக்கத்திற்கு மாறாக மாடியில் உணவருந்துவதும் உண்டு. இன்று குட்டிக்காக வழக்கம் மாறிற்று.


குட்டியும் கொடுத்த பாலை நன்கு  குடித்து விட்டு தூங்கி விட்டாள்… எத்தனை நாள் பசியோ தெரியவில்லை…!

இரவு உணவு முடித்து அமைதியாக அமர்ந்திருந்தோம் …!

’என்ன நேரமாச்சே! இன்னும் தூங்கப் போகலயா?’ என்றவாறே  இருவரையும் பார்த்தார்,  மாடிக்கு வந்த கணவர். நாங்களும் ஒருவரையொருவர் பார்த்தவாறே யார், எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்…!

ஆதியின் அறைக்கதவு அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் குட்டியை நோக்கி என் கண்கள் சென்றன. தொடர்ந்து கணவரின் கண்களும் அங்கு பார்த்தன…நடந்ததை மெல்ல விவரித்தேன்…

“எதுக்குப்பா? நமக்கு இருக்கும் வேலையில இத கவனிக்க எங்கு நேரம்? காலை 4 மணியிலிருந்து அம்மாவின் நாள் தொடங்குது. பள்ளி வேலை, வீட்டு வேலைன்னு எவ்வளவோ பொறுப்புகள்…! நீயும் காலையில் ஆப்ஸ்க்கு போனா வரதுக்கு இரவு ஆயிடுது. எனக்கோ பத்திரிகை வேலை… எப்போ என்ன மீட்டிங், ப்ரஸ் ஷோ இருக்கும்னு சொல்ல முடியாது…

பெரியவங்கள கவனிச்சுகிட்டு நம்மளோடவேலைய பார்க்கறதே, சரியா இருக்குஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூட நேரமில்லைஇப்பவே அம்மாவும் நானும் ஷிப்டு சிஸ்டத்துல வீட்டைக் கவனிக்கிறோம்அதோட இந்தகமிட்மென்ட்தேவையா?

இப்படித்தான் முன்னாடி நாம இருந்த வீட்டில், பரிதாபப் பட்டு தெரு நாய்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டாங்க உன் அம்மா…!

விளைவு.. ப்ளாட் வாசல்ல வந்து எல்லா நாய்களும் உக்காருதுன்னு அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் புகார் பண்ணினது தான் மிச்சம்

தெருவுல இப்படி எத்தனையோ நாய்கள் இருக்கு…எல்லாவற்றுக்கும் நாம அடைக்கலம் கொடுக்க முடியாது…புரிஞ்சிக்கோ…”என்று சற்று கோபம் கலந்த வருத்தத்துடன் கூறினார் கணவர்.

சரிப்பா…எங்க பார்த்தேனோ அங்கேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன்…ஆனா நாளைக்குள்ள நிச்சயம் ஏதாவது ஆயிடும்…கண்ணால பார்த்ததால விட்டுட்டு வர முடியல..என்றான் மகன் வருத்தமாக…

மனதிற்கு என்னவோ செய்தது…இருபக்க வாதமும் நியாயமாக இருந்ததால்…’இருதலைக் கொள்ளி’யாக தவித்தது மனம்…

“ வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் உன் பூர்வ ஜென்ம கர்ம வினைகளே ஆகும்…இதில் வேண்டியவர் வேண்டாதவர் என யாருமில்லை” என்ற கீதையின் கருத்தை உணர்ந்தவள் நான்…

‘விட்ட குறை, தொட்ட குறை’ என்பது போல் எப்பிறவியின் தொடர்ச்சியோ இது…!

‘ நான்  பாத்துகறேன் மா’ மகனின் கெஞ்சும் குரல் என் சிந்தனையைக் கலைத்தது…

‘ சரி… என்னவோ பண்ணுங்க…’ என்று கூறிச் சென்று விட்டார் கணவர்.

                                                           ***

பாதி சம்மதம் கிடைத்தது போல் உணர்ந்தோம் இருவரும்.

அன்று இரவு ஆதி தன் அறையில் ‘ஐ’ குட்டியைத் தூங்கத் வைத்தான்…நொடியும் தூங்காமல் அது கத்திக் கொண்டே இருந்தது. இரவு முழுதும் தூக்கமற்று சிவந்த கண்களுடன் வந்த மகனைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.


இப்படியே அடுத்த இரு நாட்கள் தொடர்ந்தாலும் ,சனி, ஞாயிறு என்பதால் சமாளித்தோம்.

                                                               ***

திங்கட்கிழமை….நானும், ஆதியும் காலை 7.30 மணிக்கு கிளம்பி விட்டோம். பள்ளியில் என்னை விட்டு அலுவலகம் சென்று விடுவான் மகன்.

மாடி ‘பால்கனி’ பகுதியில் குட்டியை வைத்து இருந்தோம்… விளையாட ஆள் இல்லாததால், பாலும் குடிக்காமல் கத்திக் கொண்டே இருந்தாள் ‘ஐ’…

கத்திக் கத்தித் தொண்டை வறண்ட, குட்டியை அப்படியே விட மனமில்லாமல் ‘பீடிங் பாட்டில்’மூலம் பால் குடிக்கச் செய்தார்  கணவர். கொஞ்சம் குடித்தது.

அடுத்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. வீடு முழுக்க கழிவுகளை வெளியேற்றி இருந்தது குட்டி.

மாலை பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக ‘குற்றப்பத்திரிகை ‘ ஒன்றை வாசித்து விட்டு வெளியே கிளம்பி விட்டார் கணவர்.

யார் மனதையும்,  யாரும் காயப் படுத்த வேண்டாம் என்பதாலும் கோபத்தில் வார்த்தைகள் தடிக்க வேண்டாம் என்ற எண்ணத்திலும் ஒருவரோடு ஒருவர் பேசுவது குறைந்தது …அசாதாரணச் சூழலுடன் சென்றது அந்த வாரம்.

                                                                  ***

வெள்ளி இரவு மகனிடம் பேசினேன்.

“ஆதிமா, நாளைக்கு ‘ஐ’ குட்டிய ‘ப்ளூ க்ராஸ்’ இல்லனா ‘ஸ்ரே டாக்ஸ்’  இருக்குற இடத்துல கொண்டு போய் விட்டுடு… வழக்கமா கொடுக்கற மாதிரி ‘டொனேஷன்’ குடுத்திடலாம்…

அது வரை செல்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் பேசுவது நான் தானா என்பது  போல் என்னை உற்றுப் பார்த்தான்.

“இப்படி நான் சொல்லறதுக்கு நீ வருத்தப்படக்கூடாது…எனக்கும் மனசு இல்ல தான்…ஆனா யோசிச்சிப்பாரு…நானும் நீயும் காலையில் கிளம்பிடறோம்…வீட்டுக்கு வந்த பின்னும் எனக்கு வேலைகள் சரியா இருக்கு…நீ வரவும் இரவு ஆயிடுது. இடைப்பட்ட நேரத்துல குட்டிய யார் பாத்துப்பா? தாத்தா,பாட்டி வயசானவங்க… அவங்கள கவனிச்சுட்டு, தன்னோட வேலையைப் பார்க்கவே நேரம் போதலை அப்பாவுக்கு… நான் வந்த அப்புறம் தான் வெளியே போக முடியுது…

இந்த ஒரு வாரமா அப்பா முகமே சரியில்லை…வேலை அழுத்தம் அதிகமாகி கோபப்படுகிறார்..அப்பாவுக்கும் வயசாகுது…நம் ஆசையை விட, அப்பாவோட உடல் நலமும், குடும்ப அமைதியும் எனக்கு ரொம்ப முக்கியம்.

கலங்கிய கண்களோடு நான் கூறியதைக் கேட்டவுடன், ‘சரி’ என்றான் ஆதி அரை மனதோடு.

கணவரிடம் இந்த முடிவைச் சொன்னபோது, அவருக்கும் மனம் ஒப்பவில்லை.

“எங்கேயும் அனுப்ப வேண்டாம்…வீட்டுக்குள்ள வச்சிருந்தா தான் அதிக பராமரிப்பு தேவைப்படும்.  இதுக்கு மனவளர்ச்சி வேறு குறைவா இருக்கு. நாம் சொல்லறதே அதுக்குப் புரியலை. வயிறு வேற ப்ரச்சனையா இருக்கு. சாப்பாடு நிறைய தேவைப்படுது. சில நேரம் அளவுக்கு அதிகமா சாப்டுட்டு அவஸ்த படுது. வேற இடத்துக்குப் போனா கஷ்டப்படும். பெண் குட்டி வேற…அது பாட்டுக்கு ‘பார்க்கிங்’ பகுதியில இருக்கட்டும். பாத்துக்கலாம்”என்றார்.

                                                                   ***

இப்படியே சுமார் 3 ½ வருடங்கள் எங்களோடு இருந்தாள் ‘ஐ’.

‘ஐ’ என்ற சொல்லுக்குத் திருமகள், அழகு எனப் பல பொருள்கள் உண்டு. வெள்ளிக்கிழமை வந்த அழகான பெண் குட்டி என்பதால் இந்தப் பெயர் வைத்தேன். ஆனால் அழைப்பதற்கு இலகுவாக இல்லாததாலும், இப்பெயர் வைத்து அழைத்தால் பொருள் புரியாதவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்றும்’ குட்டி’ என்று அழைக்க ஆரம்பித்து, செல்லமாக ஜாக்ஸ்,ஜாக்ஸி எனப் பெயர் மாற்றம் பெற்றுவிட்டாள் ‘ஐ’.

‘ஐ’ க்கு ஆதி மீது  அலாதி பிரியம்.  அவளுடைய தேவைகளை அனேகமாகக் கவனிப்பவர் கணவர் தான் என்றாலும்,  கண்டிப்பு மிகுந்த அவரது சொல்லுக்கு மட்டுமே அவள் கட்டுப்படுவாள்.

 ஆதி வெளியிலிருந்தோ அலுவலகத்திலிருந்தோ வந்து விட்டான் என்பதைப் பல நேரம் ‘ஐ’ தான் எனக்கு உணர்த்துவாள். வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வருவதற்குள்,பல கதைகள் பேசி அவன் மீது ஏறி விளையாடி அமர்க்களப்படுத்துவாள். அவன் ஆடைகளைத் தன் காலடித்தடத்தால் அழுக்காக்குவாள். 

 குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வந்தால், மகிழுந்திலிருந்து முதலில் இறங்குபவர் கணவர் தான் . இல்லையேல் அவளைக் கட்டுப்படுத்துவது சிரமம்.  எங்கள் மீது ஏறி கீறி புத்தாடைகளை ஒரு வழி செய்திடுவாள் .மகிழுந்தில் ஏறிக் கொண்டு இறங்க மறுப்பாள்.

குட்டியாய் இருந்த வரை, தெருவில் உள்ள மற்ற நாய்களால் அவளுக்கு ஆபத்து நேருமோ என்று கட்டி வைத்து, காலை மாலை ‘வாக்கிங்’ அழைத்துச் சென்று வந்தோம்.  தெரு நாய்கள் பரிச்சயம் ஆகிவிட்ட நிலையில்  அடைத்து வைக்க மனமில்லாமல் அவிழ்த்து விட்டோம்.


நேரத்திற்கு சாப்பிட்டு,வெளியே உலாவி விட்டு ‘பார்க்கிங்’ இல் வந்து படுத்துக் கொள்வாள். இப்படியே சில நாட்கள் சென்றன. வேறு எங்கிருந்தோ வந்த இரண்டு குட்டி நாய்களும் இவளோடு வந்து ஒன்றிக் கொள்ளவே நண்பர்களுடன் மகிழ்ச்சியாக காலத்தைக் கழித்தாள்’ஐ’.

                                                     ***

மழைக்காலத்தில் நாய்களைத் தாக்கும் ஒருவிதமான நோய்க்கு ஒன்றிக்கொண்ட குட்டிகள் பலியாகி விட்டன. குட்டியும் சோர்ந்து காணப்பட்டாள். மருத்துவர் கூறக் கேட்டு தான் நோய் பற்றிய விபரங்களை அறிய முடிந்தது. தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து அவளை மீட்டு எடுத்தனர் கணவனும் மகனும்.

உடல் நலம் இல்லாத போது நடுங்கிய உடலுக்கு ‘ஸ்வெட்டர்’ மாட்டி, குளிருக்கு இதமாக ‘வீடு’ அமைத்துக் கொடுத்தவர் கணவர் தான்.

                                                      ***

குட்டி பெரிய பெண் ஆகிவிட்டாள் என்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. ஆண் நாய்களின் தொல்லை  அதிகமானது. எங்களுக்கு அடுத்த பிர்ச்சனை ஆரம்பமானது.

“குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிடலாம்.  இல்லனா பிறக்கக்கூடிய குட்டிகளையும் நாம தான்  பராமரிக்கணும்” என்றார் கணவர்.

எனக்கு மனம் ஒப்பவில்லை.

 “வேண்டாங்க. ஒரு முறை குட்டி போட்டு விடட்டும். அப்புறமா பார்த்துக்கலாம். நாயாக இருந்தாலும் அதுவும் ‘தாய்மை’ யை உணரட்டுமே” என்றேன்.


‘ஐ’ யும் கருவுற்று இரண்டு குட்டிகளுக்குத் தாயானாள்…பிற நாய்களைப் போல குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் இவளுக்கு ,இல்லாததால்  குட்டிகளைப் பாதுகாக்கவும் பெரும் பிரயத்தனப் பட்டு விட்டோம்.

எவ்வளவு பாதுகாத்து வைத்தும், ஊர்ந்து சென்ற ஒரு குட்டியை தெரு நாய்கள் கடித்து அது இறந்து போனது.  மற்றொரு குட்டியை ஆதியின் நண்பர் ஒருவர் ‘தத்து ‘எடுத்து கொண்டு போய் முடியாமல் மீண்டும் எங்களிடமே திரும்பக் கொடுத்து விட்டார். சில நாட்கள் எங்களோடு இருந்த அவள் திடீரென மாயமானாள். மீண்டும் தனிமை ஆனாள் ‘ஐ’.


                                                 ***

நாட்களும் கடந்து கொண்டு இருந்த நிலையில் ‘கொரோனா” உலகையே புரட்டிப் போட்டது .அன்றாட வாழ்வே சவாலாகவும் சிக்கலாகவும் மாறி, வீட்டை விட்டு வெளியே செல்வதே ‘பாவச் செயலாக’ ஆனது.

மீண்டும் உடல் நலம் குன்றினாள் ‘ஐ’. வெளியே எங்கும் செல்லாமல் ‘பார்க்கிங்’ இல் கதியாகக் கிடந்தாள். வீட்டில் இருந்த மருந்துகளைக் கொண்டு அவளுக்கு சிகிச்சை அளித்து வந்தோம்.

செப்டம்பர் 13ஆம் நாள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். ஆவலாகக் குடிக்கும் பாலைக் கூடத் தொடவில்லை.

விடியற்காலை மாடியிலிருந்து நான் இறங்கும் ஓசை கேட்டாலே வாலை பலமாக ஆட்டத் தொடங்குவாள். இறங்கியவுடன் சன்னல் வழியே அவளிடம் ஏதாவது பேச வேண்டும். மீண்டும் வாலை ஆட்டிவிட்டு குரல் கொடுத்து விட்டு தூங்கி விடுவாள்.


செப்டம்பர் 14 ஆம் நாள் … வழக்கமாக, ஆதியின் இரு சக்கர வாகனத்தின் முற்பகுதியில், தூங்கும் இடத்தில் அவள் இல்லை…வாலாட்டும் ஓசையும் கேட்கவில்லை.

மனதிற்குள் ஏதோ பிசைய ஆரம்பித்தது…பெயர் கூறி அழைத்தும் சத்தம் இல்லை. மகனை அழைத்து வெளியே சென்று பார்க்கச் சொன்னேன். மகிழுந்தின் அடியில் கண்கள் திறந்த நிலையில் படுத்திருந்தாள்…உயிரற்ற உடலோடு…

                                                             ***


வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் காலி நிலத்தில் அவளை அடக்கம் செய்தனர், இருவரும்.

இனம் புரியா உணர்வு எல்லோரிடமும் பரவி இருந்தது.  அதைப் பகிர முடியாத அளவிற்கு வேலைப் பளு இருந்ததால்,  அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தோம்… மெளனமாக.

மதிய உணவு உண்டு முடித்து, பாத்திரங்களை மூடி வைத்துக் கொண்டிருந்தேன்…

‘குட்டிக்கு சாதம் குடும்மா’ என்றார் கணவர்…ஆதியும் நானும் சட்டென அவரைப் பார்த்த பார்வையில்…புரிந்தவராய் ‘ஓ’ என்றார், கண்கள் கசிய… !

இப்பொழுதெல்லாம் ஆதியின் ஆடைகளில்  ‘காலடித் தட’ அழுக்குகள் இல்லை.

காலையில், மாடியிலிருந்து இறங்கியதும்  ஜன்னல் புறம்  சென்று பார்ப்பதை என் கண்கள் மறப்பதில்லை…!

ஆதியின்  இரு சக்கர வாகனத்தின் முற்பகுதி’ வெற்றிடமாய்’ இருக்கிறது…வாலாட்டும் ஓசையின்றி…!

                                                                      ***




நிழற்படங்கள் மற்றும் காணொலி - ஆதி பகவன்

நிழற்படங்கள் அனைத்தும் 'ஐ'யின் நிஜப்படங்கள்.

Comments

  1. Wonderful post! :')

    ReplyDelete
    Replies
    1. அருமையான படைப்பு , வாழ்த்துகள்

      Delete
  2. குட்டியின் கதை மனதை மிகவும் தொட்டுவிட்டது
    எளிய உரைநடை குட்டியை கண் முன் வந்து நிறுத்துகிறது
    👏👏👌👌

    ReplyDelete
  3. Really touching real story, Eye 🐐🌷

    ReplyDelete
  4. உண்மையில் மனதை வருடியது ஐ - யின் கதை 👌👌👌

    ReplyDelete
  5. மிகவும் அருமை.நிழற்,நிஜ படங்கள் கதைக்கு உயிரூட்டின.

    ReplyDelete
  6. Truly heartfelt moments. Something which dog owners can always cherish. Thank you so much for such adorable writing. It awakened my moments with our pet dog. 😃😃😃

    ReplyDelete
    Replies
    1. அருமையான மனதைத் தொடும் நிஜக் கதை. கதையை‌உயிரோட்டத்தோடு கொண்டு சென்றுள்ளீர்
      முதலில் அனுமதிக்க தயங்கிய‌( சூழ்நிலை காரணமாக) கணவரே கடைசியில அதிக அளவில் ஐ யின் மறைவை கிரகித்துக் கொள்ள ‌இயலாதவராய் இருப்பது மனதைக் தொடுகிறது.
      உங்கள் படைப்புகள் தொடர் எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
      வாழ்க வளமுடன்

      Delete
    2. என்றென்றும் அன்புடன் சங்கீதா

      Delete
  7. My favorite thing about this piece is the beautiful way in which you have captured how I made you all feel, and that feeling shines through all the positive and warm moments you recollect here despite the heartbreak at the end <3

    ReplyDelete
  8. Yatharthamaana urainadai..
    Paasam, kadamei, parivu, ematram, santhosham, thuyaram, magzhichi ena pala parimanangal..
    Throughly enjoyed

    ReplyDelete
  9. Very very touching real story.
    Travelled throughout the heartfelt moments but very sad at the end. Images given life to the story. Hats off to Adhi��

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...