‘சைவம்’ என்ற சொல்லுக்கு சிவ சம்பந்தம் உடையது’ என்பது பொருளாகும். சிவனுடன் ஒன்றி இருப்பதான நிலையே ‘சைவம்’ என்கிறார் திருமூலர். பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களும் சிவ சம்பந்தம் உடையன.
‘சித்தாந்தம்’ என்பது முடிந்த முடிவு’. எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் கொள்ளப்படுவது முடிவு. பின் நன்கு ஆராய்ந்து இறுதியாக கொள்ளப்படுவது முடிந்த முடிவு. சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிவாகவும் இருக்கலாம். எனினும் ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலையாக இல்லாமல் நிலைத்து நிற்கும் முடிவாகி நிகழுமாயின் அதுவே முடிந்த முடிவாகும். எனவே சித்தாந்தம் என்பது முடிந்த முடிவாகிறது .(சைவ சமய விளக்கு நா. சுப்புரெட்டியார்).
சுருங்கக் கூறின் அப்பர் ,சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயக் குரவர்களும், மெய்கண்டார், அருள்நந்தி சிவம். மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் போன்ற சந்தான ஆசிரியர்களாலும், வழிவந்த அருட்பெரும் சான்றோர்களும் பரப்பி வழங்கப்பெற்றது சைவ சித்தாந்தம்.
வடமொழியில் உபநிடதங்களிலும் வேறு பல வேத நூல்களிலும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தாலும் வேத காலத்திலோ அதற்குப் பிற்பட்ட காலத்திலோ இந்தத்தத்துவம் பற்றிய நூல்கள் எவையும் இல்லை என்கிறார் மறைமலைஅடிகள்.
சித்தாந்த நெறி தமிழகத்திலும் தமிழ் மொழியிலும் தோன்றியதாகும் என்கிறார் எஸ்.என். தாஸ் குப்தா.( ஹிஸ்டரி ஆப் இந்தியன் பிலாசபி) இவருடைய கூற்றின் வாயிலாக சைவசித்தாந்த கொள்கைகள் தமிழர்க்கே உரிய தனிச் சிறப்புடையதாகும் எனக் கூறலாம்.
‘சைவ சித்தாந்தம்’என்னும் அரிய பெரிய தத்துவ கொள்கையானது தமிழ் மக்களின் பேரறிவின் பெரும் பயனாகும். இந்திய நாட்டிலுள்ள சமயங்கள் எல்லாவற்றிலும் சைவ சமயமே மிக விரிந்தது. பெரும்பான்மையான மக்களால் தழுவப் பெற்றதும் ,தமிழ் மக்களின் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்து அரசு வீற்றிருப்பதுமாய் உள்ளது என்கிறார் ஜி. யு. போப். மனிதகுலத்தின் சிந்தனையிலே முழு நிறைவான, முழுவதுமாகப் பெரிதும் மதித்துப்போற்றத்தக்கதாக விளங்குவது சைவ சித்தாந்தமே ஆகும் என்று கமின்
சுலபலும் குறிப்பிட்டுள்ளார். (மேற்கோள் ந.ரா. முருகவேல் சைவ சித்தாந்தம்) இவை சைவ சித்தாந்தம் பற்றிய மேனாட்டு அறிஞர்களின் கருத்துகளாகும்.
தொல்காப்பியமும் தமிழும்:
தமிழில் இலக்கணம் இலக்கியம் என்ற இரு நிலைகளில் போற்றப்படுகின்ற முதல் நூலான தொல்காப்பியத்தில் சைவசித்தாந்த கருத்துக்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
‘உயிர் மெய் அல்லன
மொழி முதல் ஆகா’
‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்’
என்ற நூற்பாவில் மெய்களின் ஒலிப்பும், அசைவும் அகர எழுத்தினைச் சார்ந்து பொருந்தியே அமையும் என்பதை அறியலாம். உயிருள்ள, உயிரற்ற உயர்திணை, அஃறிணை என எல்லாவற்றிலும் இறைவன் இரண்டற கலந்தவனாக இருப்பது போல், அகரமும் மெய்யொடு கலந்து அதன் தன்மையைப் பெற்றதாகிறது.
‘அகரமுதல’ எனத் தொடங்கும் குறட்பாவும் இதனை மெய்ப்பிக்கும். எழுத்துகளில் ‘அகரம்’ ஆகின்றேன் நானே என்ற கண்ணனின் கூற்றும் இதனைப் பிரதிபலிக்கிறது.(தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நச்சினார்க்கினியர் உரை)
உடம்படுமெய்யின் உருபுகொளல் வரையார்’
வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் ‘
என்ற நூற்பா இறை இலக்கணத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
‘ ஒன்றே லேறே என்றிரு பால் வயின்
ஒன்றியுயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே
என்ற நூற்பா மூலம் கடவுள் ஆணையால் தலைவனும் தலைவியும் ஊழ்வினை மூலம் ஒருவரை ஒருவர் காண்பர் என்று கூறப்பட்டுள்ளது.
'காலம் உலகம் உயிரே உடம்பே
பால் வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
ஆயீரைந் தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன’
சங்க இலக்கியக் காலமும் சைவ நெறியும்:
மாக விசும்போடடைந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக’
என்ற மதுரைக்காஞ்சியின் அடிகளால் பதி, பசு,பாசம் என்ற முப்பொருள்களின் இயல்பினைச் சுட்டும் சைவ சித்தாந்த
கருத்தை அறியலாம். அம்முப்பொருள்களின் முதற் பொருளான பதி இறைவன் சிவன் அனைத்து பொருள்களுக்கும் மேலானவன் என்பதையும் அறிய முடிகிறது.
' மாசற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்'
சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் இருந்து வேதம் உரைத்த செய்தியை,
'ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை
நான்மையு முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம்'
என்ற அகநானூற்று அடிகள் கூறுகின்றன.
இம்மை மறுமை பற்றிய செய்திகள் இப்பிறப்பில் செய்யக்கூடியவை மறு பிறப்பிற்கு ஏதுவாகும் என்ற சைவ சித்தாந்த செய்தியை ,
‘இம்மை செய்தது மறுமைக் காமெனும்’ என்ற புறநானூற்று அடி கூறுகின்றது. இவ்வாறாக இம்மை மறுமை நல்வினை தீவினை முதலிய சைவ சித்தாந்த கருத்துக்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு ஊடுருவி இருப்பதை காணமுடிகிறது.
சங்கம் மருவிய காலம் - திருக்குறளில் சைவ சித்தாந்த கொள்கை
‘ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பது போன்று உலகிற்கு முதலாக ஆதிபகவன் ஆகிய இறைவன் இருக்கிறான் என்பது குறளின் கருத்து. இதனால் உலகிற்குக் கடவுள் நிமித்த காரணன் என்னும் சைவ சித்தாந்த கருத்து தெளிவடைகிறது.
‘தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை’
என்ற குறள் சைவ சித்தாந்த கருத்தான கொல்லாமையைக் குறிப்பிடுகிறது.
சான்றோர் பழிக்கும் வினை’
என்ற குறளில் வினைத்தூய்மை என்ற சைவ சித்தாந்த கருத்து கூறப்படுகிறது.
'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு'
என்ற குறள் கருத்து
‘அருளிற் பெரிய தகிலத்து இல்வேண்டும்
பொருளிற்றலையிலது போல்’
என்ற உமாபதி சிவாச்சாரியார் கருத்துடன் பொருந்துகிறது.
‘அருள்’ என்பது சைவசித்தாந்தத்தில் இறைவன் உயிர்களுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய நிலையாகும். அவ்வருளைப் பெறுவதற்குரிய செயலை உயிர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து உணரப்படுகிறது.
‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து'
என்ற குறளோடு
‘ புலன் அடக்கித்தம்முதற்கட் புக்குறுவார் போதார்
தலம் நடக்கும் ஆமைதக’
என்ற திருவருட்பயன் கருத்தோடு ஒப்புமை உடையதாக உள்ளது.
'இரட்டைக் காப்பியங்கள்’ என்று கூறப்படுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு நூல்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்கள் அமைந்துள்ளன.
‘பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்’
‘பசுப்பல கோடி பிரம்மன் முதலாய்ப்
பசுக்களை கட்டிய பாச மூன்றுண்டு
பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே’
என்ற திருமந்திரப் பாடலில் சைவசித்தாந்தத்தில் பொருள்களான பதி ,பசு, பாசம் என்பவை பற்றிக்கூறப்பட்டுள்ளன. பசு, பாசம் முதலியவற்றை நீக்கி விட்டால் பதியை அடையும் என்று கூறியுள்ளார்.
அவாயம் அறவே யடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவவென் றென்றே சிந்தை
அவாயம் கெடனீற்க ஆனந்த மாமே’
‘கங்காளன் பூசுமங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே’
என்ற திருமந்திரப் பாடல் திருநீறு திருவடி சேர்ப்பிக்கும் என்ற செய்தியைக் கூறுகிறது. இச்செய்தி சைவசித்தாந்தத்தில் கூறப்படும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற நான்கு வகை பதவிகளில் நான்காவதாக உள்ள சாயுஜ்ய பதவியை அடைவதற்கான வழி முறையை கூறுவதாய் அமைந்துள்ளது.
தேவார திருவாசகக் காலம்:
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோருடைய வாழ்வே ஒரு பெரும் இலக்கியம். சைவ சித்தாந்தம் அதிலிருந்து வடித்தெடுத்த சிறந்த இலக்கணம்.( ந. ரா. முருகவேல் – சைவ சித்தாந்தம்)
அங்க அடையாளங்களுடன் கூடிய இறைவனின் தோற்றம் இல்லாமல் பக்தி என்னும் உணர்ச்சி பெருக முடியாது. இப்படிப்பட்ட இறைவனை முன்வைக்காமல் பக்தி உணர்வைப் பெருக்கெடுக்க செய்யமுடியாது என்பது நாயன்மார்களின் கருத்து.
‘மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை
மலிந்த வரை மார்பின்
பெண் மகிழ்ந்த பிரான்’
என்ற திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. அச்சுறுத்தும் நஞ்சுடைய பாம்பினையும் மணம் வீசி மகிழ்வு தரும் கொன்றையையும் முறையே வெறுப்பும் விருப்பும் இன்றி தன் மார்பில் அணிந்தவன் சிவபெருமான் என்பது பாடலின் பொருள்.
‘புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின
தீர பொருளாய
அந்தி அன்னதொரு பேரொளி யான்’
என்ற பாடல் மனம் பொறி வழி சென்று பொருள்களைப் பற்றாமல் ஒருமையாக நின்று தியானிக்கும் அடியார்களுக்கு அவர்களுடைய வினைகள் தீரும் படி தியானிக்கும் பொருளாகி விளங்குகின்ற செம்மேனி அம்மான் இறைவன் என்பதனை கூறுகின்றது. இக்கருத்து சைவசித்தாந்த கருத்தோடு தொடர்புடையதாக அமைகிறது.
‘பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்
புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்
ஐயஞ்சி அப்புறத்தானும்
ஆரூர் அமர்ந்த அம்மானே’
‘ஐவர் கொண்டிங்காட்ட ஆடி
ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யு மாறு ஒன்றருளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியு ளீரே’
‘மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ் சோறும் ஒன்பது வாயிற் குடிலை’
என்ற திருவாசகப் பாடல் சைவசித்தாந்தத்தில் கூறப்படும் மூவகை மலங்களைக் குறிப்பிடுகின்றது.
‘தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’
என்று கூறும் மாணிக்க வாசகர் சிவன் தென்னாட்டிற்குச் சொந்தமானவன் என்றும் அவன் எந்நாட்டவர்க்கும் உரிமையானவர் என்றும் வரையறை செய்கிறார். இவ்வாறு தேவார திருவாசக பாடல்கள் சைவ சமயத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன.
பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டில் சிவ வழிபாடு இருந்தது என்றும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும், ஆடவல்லான் ஆகவும், தமிழர்கள் கொண்டாடினர் என்றும் இறைவனுடைய புகழைப் பாடிப் பரவும் அடியார்கள் இருந்தனர் என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு பற்பல சான்றுகளை நிறுவுகின்றன தமிழ் இலக்கியங்கள்.
சைவமும் தமிழும் வெவ்வேறல்ல ஒன்றே.
Gone very deep into the Illakkiyangal. Nice to read. Learnt new things from your writeup. Thank you
ReplyDeleteஅழகு த் தமிழில் விளக்கங்கள் அருமையிலும் அருமை, தேவாரம், திருவாசகம், திருக்குறள் படிக்க படிக்க தெகிட்டாத தேன், தொடரட்டும் உனது தமிழ் பணி, வாழ்க வளமுடன்
ReplyDelete