ஆயக்கலைகள் 64. இவை அனைத்துமே இறை தன்மையுடையவை. இவற்றுள் நடன கலை என்பது கலைஞரையும் கலையையும் பிரிக்க இயலாத தன்மை உடையது. சான்றாக பிற கலைகளான இசை, ஓவியம், சிற்பம், சமையல் போன்றவற்றில், கலைகளையும் கலைஞர்களையும் வேறுபடுத்தலாம். வேறுபடுத்தினும் அவற்றை நம்மால் ரசிக்க முடியும். நடனக் கலையில் மட்டும் நடனத்தையும் ஆடும் கலைஞரையும் பிரிக்க இயலாது. நடனமும் கலைஞனும் ஒன்றே என்பதானது நடனக்கலை. எனவேதான் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானும் நடனக்கலைக்குத் தன்னைத் தலைவன் ஆக்கிக்கொண்டார். நடனக்கலை மூலம் மிகப்பெரிய திருவிளையாடலையும் நிகழ்த்தினார்.
தில்லை( சிதம்பரம் )அம்பலத்தே பொன்னம்பல பெருமான். மதுரையில் வெள்ளியம்பலத்தான். திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயிலில் ரத்ன சபாபதி. நெல்லையப்பர் கோயிலில் தாமிர அம்பலத்தான். குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் சித்திர அம்பலத்தான் எனக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார் ஈசன்.
பஞ்சபூத தலங்களில்ஒன்றான தில்லையில் (பொன்னம்பலம்) ஆனந்தத் தாண்டவமாடி பிரபஞ்ச நடனத்தைக்( தைப்பூச திருநாளில்) காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.
காளி தேவிக்கும் நடராஜருக்கும் இடையே நடந்த நடனப் போட்டியில் சிறந்தவர் யார் எனக் கூற முடியா நிலையில், நடராசர் கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையூறு அடையா வண்ணம் தனது காலிலேயே எடுத்து அணிய முற்பட, அக்கோலத்தில் தன்னால் ஆட இயலாது எனக் காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறது வரலாறு.
சித்திர அம்பலம் அல்லது சித்திர சபை எனப் பெயர் கொண்டது திருக்குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் ஆகும். இங்குள்ள சபையில் திரிபுர தாண்டவம் ஆடுகிறார் நடராஜப்பெருமான். விருட்சம் குறும்பலா என்பதால் ஐயன் குறுங்காலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சங்கு வடிவில் இக்கோயில் அமைந்துள்ளதால் சங்கு கோயில் எனவும் இது அழைக்கப்படுகிறது. இங்குள்ள சித்திர அம்பலம் முதன்மை கோயிலை விட்டு சற்று தள்ளி கண்கவர் சித்திர அம்பலமாய் அமைந்துள்ளது. இதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான அழகிய சுவர் ஓவியங்கள் இந்து சமய புராண கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன.
ஐந்து நடன சபைகளிலும் நடராஜன் ஆடும் திருநடனத்தைக் காண கண் கோடி வேண்டும். ஆடல்வல்லானின் ஆட்டமே பிரபஞ்சத்தின் பேரியக்கம்.
இவ்வாறு தன் ஆட்டத்தால் பிரபஞ்ச உயிர்களை உய்விக்கும் எம்பெருமான் மதுரையம்பதியில் மட்டும் வலது காலை தூக்கி இடது காலை வைத்து களிநடனம் புரிகிறார். ஏன்?
ஐயனின் 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. சங்கம் வளர்த்த மதுரையைப் பிற்காலத்தில் ஆண்டு வந்தான் ராஜசேகர பாண்டியன் என்னும் மன்னன்.
சிவபெருமான் மீது அளவில்லா அன்பு கொண்டவன். ஆயக்கலைகள் அறுபத்து மூன்றினைக் கற்றுத் தேர்ந்தவன். பரதக் கலையை மட்டும் கற்காமல் இருந்தான். அண்டத்தையே ஆட்டுவிக்கும் நடனத்துக்கு தலைவனான நடராஜர் ஆடும் நடனத்தை மானுடனான தான் ஆடுவது பெரும் குற்றம் எனக் கருதி அக்கலையைக் கற்காமல் இருந்தான். ஆனால் உலக உயிர்களை ஆட்டுவிக்கும் எம்பெருமானின் எண்ணம் வேறல்லவோ!
சோழ நாட்டிலிருந்து வந்த புலவரின் வடிவில் திருவிளையாடலை நடத்தினார் எம்பெருமான்.சோழ மன்னன் கரிகாலனது அவையில் இருந்து தான் வருவதாகவும் தம் மன்னன் 64 கலைகளிலும் சிறந்தவன் என்றும் பாண்டியன் ராஜ சேகரனுக்கு நடனக் கலையில் தேர்ச்சி இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் புலவர். அதற்குரிய விளக்கத்தை மன்னன் கூறிய போதும் அதை அவர் ஏற்றுக் கொண்டார் இல்லை. தன் சோழநாட்டின் சிறப்பையும் கரிகால் பெருவளத்தானின் சிறப்புகளையும் கூறிக்கொண்டிருந்தார்.
அவரது செயலால் வருத்தமடைந்த மன்னன் நடராஜப் பெருமானிடம் சென்று தன் நிலையைக் கூறி தான் நடனம் கற்றுக் கொள்ள அனுமதி கேட்டான். அசிரீரியும் அனுமதி அளித்தது.
பாண்டிய நாட்டின் மானத்தைக் காக்க நடனக்கலையைத் தீவிரமாக கற்றுக்கொண்டான் ராஜசேகர பாண்டியன். சில தினங்களிலேயே உடல் சோர்வடைந்து காலில் வலி பெருகுவதை உணர்ந்தான் அவன். மனதில் அவனுக்கு வினா ஒன்று உதித்தது.
சில நாட்களே நடனம் பயின்று வரும் தனக்கு இப்படி உடல் சோர்வு ஏற்பட்டு காலில் வலி மிகுதி உண்டாகிறதே ! யுகம் யுகமாய் எல்லாச் சபைகளிலும் நடனமாடும் நடராஜப் பெருமானது காலில் எவ்வளவு வலி உண்டாகும்?
இச்சிந்தனை தோன்றிய கணமே ஐயன் மீது அளவில்லாத பக்தி கொண்ட அடியவரான மன்னன் இறைவனிடம் வேண்டுகோள் ஒன்றைக் கட்டளையாக விடுக்கிறான்.
‘நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.’
“அய்யனே! நடனக் கலையின் அரசனே! பிரபஞ்ச இயக்கத்தின் காரணனே! உன் உடல் சோர்வு நீங்க, நின்ற காலை வீசி (வலது கால்) வீசிய காலை நிலத்தில் வைத்து( இடது கால்) அருள் புரிவீராக! இது என் மீது ஆணை! இதற்கு நீர் சம்மதிக்கவில்லை எனில் என் உடைவாள் மீது குப்புற வீழ்ந்து என்னை அழித்துக் கொள்வேன்” எனக் கண்ணீர் மல்க வேண்டுகிறார். வாளை நட்டு வைத்து அதில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் திட்டமிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம்!
கருணைக்கடலான வெள்ளியம்பலத்தான், மன்னனின் பக்தியில் மகிழ்ந்து, கால் மாறி ஆடி, பாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி (ஆணவம், கன்மம், மாயை) அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார். பரவச நிலையை அடைந்த பாண்டியன் இறைவனைப் போற்றி துதித்து,’ தந்தையே! எக்காலத்தும் இம்மதுரையம்பதியில் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரம் ஆகும்’ என்று மனமுருக பிரார்த்தனை செய்கிறான்.
அன்றுமுதல் கூத்தபிரான் வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய கோலத்திலேயே அருள்புரிகிறார். அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணயுடன் அடியாரின் துயர் துடைப்பவன் அல்லவா அவன்.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
ஓம் நமசிவாய…!
Om namasivaya
ReplyDeleteWow.....
ReplyDeleteAll time favourite will be to know about Natana sabhapathy. Very good interesting information.
ReplyDeleteசிவ சிவ
ReplyDeleteஅருமையான பதிவு
சிவாய நம
Very informative!
ReplyDeleteஅன்பே சிவம்
ReplyDeleteஅருமை!
ReplyDeleteHighly informative. Keep up the good work Uma.!!
ReplyDeleteInteresting and informative!
ReplyDelete